புதுச்சேரிமுதலமைச்சர் ரங்கசாமி தவெகவுடன் கூட்டணியா…?
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்கிறது. இதை கடந்த 14 ஆம் தேதி காரைக்காலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்தித்த பின் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.பாஜக நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காரைக்காலில் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அங்கு அவரை நேரில் சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி தேர்தல் பணிகள் மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தார். இதனையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே என்.ஆர்.காங்கிரஸ் நீடிப்பதாக உறுதிபட தெரிவித்தார்.என்ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் என்ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரிக்கு பிரதமர் வருகை தந்தார். தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் ரங்கசாமியை இன்று திலாசுப்பேட்டையில் உள்ள அவர் வீட்டில் சந்தித்தார்.சுமார் 5 நிமிடங்கள் தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அதன் பின்னர் சுரானா அங்கிருந்து கிளம்பிச்சென்றார். இந்த சந்திப்பின்போது, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம்பெறும். அதே நேரத்தில் தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்மல் குமார் சுரானா, இது தொடர்பாக கட்சி தலைமையிடம் தகவலை தெரிவிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் பாஜக உடன் கூட்டணி வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் தவெக உடன் கூட்டணி என்ற ரங்கசாமியின் முடிவால் பாஜக அதிர்ந்துள்ளது.புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு செல்வாக்கு உள்ளது. இந்த பகுதிகளில் ரங்கசாமியின் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்திலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் கால் பதிக்கும் என ரங்கசாமி கூறியிருந்தார். அந்த மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமியை அடிக்கடி சந்தித்து வருகின்றனர்.அந்த அடிப்படையில் தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி என ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரிக்கு என்.டி.ஏ கூட்டணி தமிழகத்துக்கு தவெக உடன் கூட்டணி என்ற முடிவை ரங்கசாமி எடுத்துள்ளதாக தெரிகிறது. இது தமிழ்நாடு, புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியிலும் தவெக உடன் கூட்டணி அமைக்கத் தான் ரங்கசாமி விரும்பினாராம். ஆனால், 2029 வரை மத்தியில் பாஜக ஆட்சி எனும்போது, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது சரியாக இருக்காது என ரங்கசாமி கருதியதாகவும் அதன் காரணமாகவே தமிழ்நாட்டில் மட்டும் தவெக உடன் கூட்டணி என திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.