விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்கினார் – விஷால் !
நடிகர் விஷால் தான் நடித்து வெளியிட்ட படத்தின் டிக்கெட் கட்டணத்தில் இருந்து ஒரு ரூபாய் வசூலித்து விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்கினார்.
நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பு ஏற்கும்போது விவசாயிகளுக்கு உதவ புதிய திட்டத்தை அறிவித்தார். அதாவது திரைக்கு வரும் படங்களின் டிக்கெட் கட்டணத்தில் இருந்து ரூ.1 வசூலித்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார். அதன்படி விஷால் நடித்து திரைக்கு வந்த இரும்புத்திரை, துப்பறிவாளன் ஆகிய படங்களில் இருந்து ஒரு டிக்கெட்டின் விலையில் இருந்து தலா ஒரு ரூபாயை வசூலித்து விவசாயிகளுக்கு ஒதுக்கிவைத்தார்.
அந்த தொகை மொத்தமாக சேர்ந்து தற்போது 11 லட்சமாக உள்ளது. 25 படங்களில் நடித்துள்ள நடிகர் விஷால் செல்லமே என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது விஷால் தனது 25-வது படமான சண்டக்கோழி-2 நடித்துள்ளார். அந்த படம் ஆயுதபூஜை அன்று திரையிடப்பட உள்ளது.
இதனைத்தொடர்ந்து, அவர் சினிமாவுக்கு வந்து 25 படங்கள் நடித்துள்ளதை விழாவாக கொண்டாடும் வகையில் விவசாயிகளுக்கு 11 லட்சத்தை பகிர்ந்து கொடுக்கும் விழாவும் ஒருசேர கொண்டாடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.11 லட்சத்தை வழங்கிய விஷால் 30–க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அந்த தொகையை பகிர்ந்தும் கொடுத்தார். அவர்களுக்கு விழாவில் வேட்டி, சேலையும் வழங்கினார். இதனை தொடர்ந்து விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்தனர்.