ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார் !!!
இந்திய குடிமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி இன்று அறிமுகப்படுத்தினார். “ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம்” என்று அழைக்கப்படுகிறது. பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த விழாவில் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் உலகில் உள்ள பல மருத்துவ நிறுவனங்கள் இதை வரவேற்றுள்ளது.
ஒரு வருடத்திற்கு 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு தொகை வழங்கப்படும். இதன் மூலம் இந்தியா முழுக்க மொத்தம் 10 கோடி குடும்பங்கள் பயன் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே “முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம்” செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
இது உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டம் என கூறப்படுகிறது. இதை ”மோடி-கேர்” என்றும் அழைக்கிறார்கள். இதில் 10 கோடி குடும்பம் மூலம் மொத்தம் 50 கோடி மக்கள் வரை பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. அதிகமாக கிராமத்து மக்கள் பயன் பெறும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கிராமத்தில் 8.03 கோடி குடும்பமும், நகரங்களில் 2 கோடி குடும்பமும் இதன் மூலம் பயனடையும்.
இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான வழிகாட்டுதல் அளித்திட இணையதள பக்கம் உருவாக்கப்பட உள்ளது. இதுவரை 8,735 மருத்துவமனைகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.