ராகுல் காந்தி பிரசாரத்தின் போது, தீ விபத்து….. மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவு !
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தின் போது, பலூன் வெடித்து தீ பற்றிய விவகாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சட்டசபை தேர்தலுக்காக திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அவரை வரவேற்க ஏராளமான கட்சி தொண்டர்கள் குவிந்தனர். அப்போது, சாலையோரம் அவரை வரவேற்க கட்சி தொண்டர் ஒருவர் வைத்திருந்த ஹீலியம் நிரப்பிய பலூன்கள், இன்னொரு தொண்டர் வைத்திருந்த ஆரத்தி தீயில் உரசியது. இதனால் பலூன்கள் வெடித்து சிதறியது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்தும் தேசிய தலைவர் ஒருவர் பிரசாரத்தில் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்தது தொண்டர்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி விசாரிக்க மத்திய பாதுகாப்பு அமைப்பு ஒரு குழுவை நியமித்துள்ளது. அந்த குழு, இதன் பின்னணியில் இருந்தது யார்? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கையாக அளிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.