மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது !
மூத்த பத்திரிக்கையாளராக கருதப்படும் நக்கீரன் கோபாலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆளுநர் பணியில் தலையிட்டதாக, நக்கீரன் பத்திரிகையின் தலைவரான நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தன மரக் கடத்தல் வீரப்பனுடன் தொடர் நேர்காணல் நடத்தியதன் மூலம் பிரபலமான இவர், தமிழக அரசுக்கும்-வீரப்பனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆட்டோ ஷங்கர் முதல் வீரப்பன் வாழ்க்கை சம்பவங்கள் வரை அனைத்தையும் புலனாய்வு செய்து அதனை நக்கீரன் இதழில் வெளியிட்டதன் மூலம் தமிழ் வாசகர்களுக்கு கோபால் பிரபலமானார். புனே செல்ல அவர் விமான நிலையம் வந்த போது, திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் நக்கீரன் கோபாலை கைது செய்தார்.
மேலும் நக்கீரன் இதழில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக பல செய்திகள் வெளிவந்ததாகவும், அதில் ஆளுநர் குறித்து அவதூறாக எழுதப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனடிப்படையில் ஆளுநர் மாளிகை சார்பாக அளித்த புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் அவரை தேசதுரோக வழக்கில் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.