மூட்டுவலிக்கு உகந்த பிரண்டை !
பிரண்டை செடி வெளி ஓரங்களில் படர்ந்து வளரும் தன்மை கொண்டது. இது பார்ப்பதற்கு எலும்பு போன்ற தோற்றம் உடையது. பிரண்டை எலும்பு முறிவிற்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. முட்டு வலி, பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும் திறன் கொண்டது பிரண்டை.
பிரண்டையில் அதிகளவு வைட்டமின் ‘இ’, வைட்டமின் ‘சி’ ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதுமட்டுமின்றி கால்சியம் சத்து அதிகளவில் காணப்படுவதால் பிரண்டையை உணவில் சேர்த்து கொள்வதால் எலும்பு பிரச்சனைகள் மற்றும் பல்வேறு உடல் உபாதைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும். இதனை துவையல் அரைத்து வாரத்திற்கு 2 முறை உணவில் சேர்த்துக்கொண்டால் மூட்டு வலி மற்றும் எலும்பு பிரச்னைகளிலிருந்தும் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
பிரண்டை துவையல் செய்யும் முறை:
தேவையான பொருட்கள்:
பிரண்டை – சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும்.
கறிவேப்பிலை -ஒரு கைப்பிடி
கடுகு -1டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -6
சின்ன வெங்காயம்- 10
புளி -ஒரு நெல்லிக்கனி அளவிற்கு
துருவிய தேங்காய் ஒரு கைப்பிடி
உப்பு தேவையான அளவு
பெருங்காய தூள் 1/2 டீஸ்பூன்
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். அதில் கடுகு சேர்க்கவும். பொரிந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகாய் சேர்க்கவும். பின்னர் வதங்கியதும் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும். பொன்னிறமாக மாறியதும் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் தேங்காய் துருவல், பெருங்காய தூள், உப்பு, புளி அனைத்தையும் சேர்த்து வதக்கி ஒரு தட்டில் ஆற வைத்து விடவும். பின்னர் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவயலில் சேர்த்து உண்ணலாம்.
சுவையான ஆரோக்கியமான பிரண்டை துவையல் தயார்.