மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பொதுமக்கள் பலரும் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
டெல்லியில் கிருஷ்ணமேனன் மார்கில் உள்ள இல்லத்தில் வைத்திருந்த வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போன்ற பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும் நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இங்கிருந்து வாஜ்பாயின் உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டு பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 1 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கும் என்றும், 4 மணியளவில் விஜய் காட் பகுதியில் உள்ள ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்தில் வாஜ்பாயின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் இன்று ஒருநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதேபோல் புதுவையிலும் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது மற்றும் தேசியளவில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு நாள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.