முதலமைச்சர் குறித்தும், காவல்துறை அதிகாரி குறித்தும் அவதூறாக பேசிய கருணாஸ் மீது வழக்கு பதிவு…

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 5 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்றுப் பேசிய அந்த இயக்கத்தின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், முதலமைச்சர் குறித்தும், காவல்துறை அதிகாரி ஒருவர் பற்றியும் அவதூறாக பேசினார். கருணாசின் சர்ச்சைக்குரிய இந்த பேச்சு, சமூக வலைதளங்களில் வெளியாகின.
இது குறித்து பேசிய கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிப் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
தமிழிசை சவுந்தரராஜன் காவல்துறை அதிகாரிக்கு சவால் விடும் வகையில் பேசியதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
இந்த பேச்சுக்கான விளைவுகளை அவர் சந்தித்தே ஆக வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். மேலும் கருணாஸ் பேச்சு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.