முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் !
இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், யானை ஆண்டாளுக்கு பழங்களை வழங்கிய முதலமைச்சர், கருடாழ்வாரை வணங்கிய பிறகு, மூலஸ்தானத்தில் ரங்கநாதரை தரிசனம் செய்தார்.
தாயார் சன்னதியிலும் தரிசனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேட்டரி காரில் பயணித்து, சக்கரத்தாழ்வார் சன்னதியிலும் வழிபாடு நடத்தினார். அமைச்சர்கள் தங்கமணி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும், திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோரும் உடனிருந்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பாக, ஸ்ரீரங்கம் ஆலயம் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.