பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் !
தந்தை பெரியாரின் 140-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தினர்.
இன்று காலை சுமார் 10 மணி அளவில் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக விடுதலை சிறுத்தை கட்சி சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பாஜக-வை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகதீசன் தன்னுடைய காலணியை கழற்றி பெரியார் சிலை மீது வீசியுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மடக்கிப்பிடித்து தாக்க முயன்றபோது போலீசார் தடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் பெரியார் சிலை மீது காலணி வீசிய பாஜக வழக்கறிஞரை போலீசார் எழும்பூர் உதவி ஆணையாளர் அலுவலகம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், பெரியார் சிலை மீது காலணி வீசத் தூண்டியவர் மனநோயாளியாக இருக்க வேண்டும் என்றார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எச்.ராஜா தூண்டுதலினால் தான் பெரியார் சிலை மீது காலணி வீசப்பட்டுள்ளதாக, குற்றம்சாட்டினார்.
தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் நாளில், அவரது சிலையை அவமானப்படுத்த முயற்சித்திருக்கும் மூடர்களை ‘தேசிய பாதுகாப்புச் சட்டத்தில்’ கைது செய்து சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும் என்றும் தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தந்தை பெரியாரை அவமதிப்பது என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் இழிவுபடுத்தும் செயல் என்று கண்டனம் தெரிவித்தார். தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை அடுத்துச் சென்னையில் உள்ள பெரியார் சிலைகளுக்குப் பாதுகாப்புக்காகக் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.