பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து செப்டம்பர் 20-ஆம் தேதி முழு அடைப்பு- காங்கிரஸ் அறிவிப்பு
இன்று சென்னையில் பெட்ரோல் விலை 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற செய்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஓட்டல் சாப்பாடு, உணவு பண்டங்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. இப்போதே ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் மற்றும் கால்டாக்சி கட்டணமும் ஆங்காங்கே உயர்த்தப்பட்டு உள்ளது. இது சாமானிய மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.
இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, வரும் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
இந்த போராட்டத்திற்கு சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பெட்ரோல் விற்பனை மையங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.