பிரதமர் நரேந்திர மோடி அணியும் குர்தா விற்பனை – அமேசான் ஒப்பந்தம் !

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அணியும் குர்தா ரகங்கள் விற்பனை செய்ய ஒப்பந்தமாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அணியும் குர்தா மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அணிந்து கொள்ளும் ஜிப்பா உள்ளிட்ட ஆடைகளும் விற்பனை செய்யப்படவுள்ளது. அமேசான் ஆன்லைன் நிறுவனம் மூலம் அடுத்த மாதத்திலிருந்து விற்பனைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஆர்எஸ்எஸ் சார்பில் ‘தீன் தயாள் தயாம்’ என்ற மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பசுவின் கோமியம், சாணம் மூலம் தயாரிக்கப்பட்ட சோப்பு, ஷாம்பு, பேஸ்ட், முகத்திற்கு போடும் பவுடர் உள்ளிட்ட 30 பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இயற்கை மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பொருட்கள் 10 ரூபாய் முதல் 230 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத் குர்தாக்கள் ஒவ்வொன்றும் ரூ.220 விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்த ஆன்லைன் விற்பனை ஒப்பந்தம் செய்துள்ளதாக ‘தீன் தயாள் தயாம் மருந்தகத்தின்’ செயலாளர் மணிஷ் குப்தா தெரிவித்துள்ளார்.