பாஜகவிற்கு எதிராக குரல் எழுப்பிய சோபியா கைது : தலைவர்கள் கண்டனம்!

தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றுள்ளார். அதே விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற பெண் பாஜக-விற்கு எதிராக ‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என கோஷமிட்டுள்ளார். இதனையடுத்து தமிழிசை அளித்த புகாரின் பெயரில் சோபியா கைது செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் “ஜனநாயக விரோத, கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” என்று பதிவிட்டுள்ளார்.
தொல்திருமவளவன் அவர்கள், சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டுள்ள சோபியாவை உடனே விடுதலை செய்ய வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என கூறினார். முழக்கமிட்டதற்காக ஒரு மாணவியை ஆபாசமான வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ள தமிழக பாஜக தலைவரின் செயல் அக்கட்சியின் பாசிச போக்குக்கு அடையாளமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தனை பேர் மத்தியில் படித்த பெண் ‘பாசிச பாஜக ஒழிக’ என்று தைரியமாக முழக்கமிடுகிறார் என்றால் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பாஜக அரசு அவநம்பிக்கையை பெற்றிருப்பது தெரிகிறது. இனியாவது தங்களை திருத்திக்கொள்ள வேண்டிய இடத்தில் பாஜக இருப்பதை தமிழிசை புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், தமிழிசையின் புகார் மீது அவசர அவரசரமாக நடவடிக்கை எடுத்து ஆரய்ச்சி படிப்பை முடித்த மாணவியை சிறையில் அடைத்திருப்பது, மத்திய அரசு மீது தமிழக அரசு வைத்திருக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது என்றும் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.