பகுத்தறிவுப் பகலவன் மறைந்துவிட்டது; பாரதிராஜா
நேற்று திரைத்துறை சார்பாக “மறக்க முடியுமா கலைஞரை” என்ற தலைப்பில் கோவையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
திரைத்துறையைச் சேர்ந்த நடிகர் சிவகுமார், பாரதிராஜா, சத்யராஜ், ராஜேஷ், மயில்சாமி, பிரகாஷ் ராஜ், பிரபு, ராதிகா, நாசர், பார்த்திபன், மோகன் பாபு, ராதா ரவி போன்றோர் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திமுக சார்பில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பாரதிராஜா, கலைஞரைப் பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை. இதனை இரங்கல் கூட்டமாக நாங்கள் கருதவில்லை. புகழ் வணக்கக் கூட்டமாக எண்ணியே கலந்துகொண்டோம். கலைஞர் என்பவர் தமிழ் எனும் மகுடியால் உலக தமிழர்களை தன் வசப்படுத்தியவர். சிவாஜி கணேசனும், கருணாநிதியும் இல்லையென்றால் பாரதிராஜா இல்லை. பகுத்தறிவுப் பகலவன் மறைந்துவிட்டது. அவரது மறைவால் ஒட்டுமொத்த தமிழர்களின் இதயம் இருண்டுவிட்டது. ஆனால், மறுபடியும் ஓரு நம்பிக்கையாய் ஸ்டாலின் இருக்கிறார் என்பது மகிழ்சியளிக்கிறது.
தமிழருக்கு அடையாளம் கலைஞர். கலைஞருக்கு அடையாளம் தமிழ். தவறு செய்தவரையும் மன்னிக்கும் மனம்படைத்தவர் என்பதை பலமுறை நிரூபித்தவர் கருணாநிதி.
என் தலைமையில் எம்.ஜி.ஆருக்கு ஒரு பாராட்டு விழா. அதற்கு அழைப்பு விடுக்கச் சென்ற போது தனியாக அழைத்து வாழ்த்தினார். சினிமாவில் வேற்றினத்தவர் கோலோச்சிய காலம் அது. சினிமாவில் இருந்த ஆதிக்கக் கோட்டையை உடைத்து, தமிழன் உள்ளே வந்திருப்பது மகிழ்ச்சித் தருகிறது என கட்டிப்பிடித்து வாழ்த்தினார். பாரதிராஜாவும், இளையராஜாவும் அந்தக் கோட்டையை உடைத்தோம். பொது வாழ்க்கை என வந்துவிட்டால் அனைத்தையும் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தியவர் கலைஞர். அவரைத் தவிர்த்து தமிழ் சினிமாவின் வரலாற்றைக் கூற யாராலும் முடியாது. ஆனால், “தமிழ் சினிமா நூற்றாண்டு விழாவில் அவர் புறக்கணிக்கப்பட்டது வேதனைக் குரியது” என்று பாரதிராஜா பேசினார்.