தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக வாங்கப்பட 515 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முறைப்படி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த விழாவில், முதலமைச்சர் பழனிசாமி ,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ரூ.134.53 கோடியில் இந்த புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை உள்ளிட்ட போக்குவரத்து கழகங்களில் இந்த புதிய பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன.
பச்சை, காவி நிறத்திற்கு பதிலாக வெள்ளை, நீலம், சாம்பல் நிறங்களில் புதிய பேருந்துகளின் நிறங்கள் மாற்றிய அமைக்கப்பட்டுள்ளன. தொலைதூர பேருந்துகள் வெள்ளை நிறத்திலும் மற்ற பேருந்துகள் நீலம், சாம்பல் நிறங்களிலும் இருக்கின்றன.
அது மட்டுமல்லாமல், தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் வரலாற்றில் முதல் முறையாக ஏசி,கழிப்பறை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள்
பயன்பாட்டுக்கு இன்று முதல் வந்துள்ளது.
புதிய பேருந்தினுள் கழிப்பறை, படுக்கை, ஏசி, சென்சாருடன் கூடிய தானியங்கி கதவுகள், தானியங்கி படிக்கட்டுகள், மாற்று திறனாளிகளுக்கு தாழ்தள
படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய பேருந்தின் முன்புறமும், பின்புறமும் சென்சார் கருவி பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அருகில் வரும் வாகனங்கள் குறித்த தகவலை ஓட்டுநருக்கு அளிக்கப்படும். தொலைதூரம் செல்லும் பேருந்துகளில் ஓட்டுநர் தூங்கினால், எச்சரிக்கை செய்யும் வகையிலும் சென்சார் கருவி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.
பேருந்து நிறுத்தத்தை தெரிவிக்கும் வகையில் டிஜிட்டல் பலகை, ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி வசதிகள் என புதிய பேருந்தில் பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.