தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் சுமார் ரூ.330 கோடிக்கு மது விற்பனை !
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் மட்டும் 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ.70 கோடிக்கு அதிகமாக மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்து உள்ளது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால் அதிக அளவில் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு டாஸ்மாக் நிர்வாகம் ரூ.350 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் விடுமுறை என்பதால் மது விற்பனை களைகட்டியது. குறிப்பாக தீபாவளி நாளான நேற்று காலை முதல் இரவு வரை டாஸ்மாக் கடைகள் திருவிழா போன்று காட்சியளித்தது.
கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.260 கோடிக்கு மது விற்ற நிலையில் இந்த ஆண்டு 70 கோடி ரூபாய் அதிகம் விற்பனை ஆகி உள்ளது.