தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு அரசு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கம்- சாலைகளில் கடும் நெரிசல்….
தீபாவளி பண்டிகை வரும் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் நேற்று முதல் புறப்படத் தொடங்கினர். 3,025 சிறப்பு பேருந்துகள், 5-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் நேற்று இயக்கப்பட்டன. பேருந்துகள், ரயில்களில் இதுவரை சுமார் 2 லட்சம் பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
5-ம் தேதி திங்கள்கிழமை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட திட்டமிட்டுள்ளவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை முதலே சென்னையில் இருந்து ரயில்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளில் புறப்படத் தொடங்கிவிட்டனர். கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று மாலைக்கு பிறகு படிப்படியாக கூட்டம் அதிகரித்தது. அங்கு 6 நிரந்தர நடைமேடைகளுடன், 3 தற்காலிக நடைமேடைகளும் அமைக்கப் பட்டு பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டு பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்பதிவு செய்யாதவர்களுக்காக 7, 8, 9 ஆகிய தற்காலிக நடைமேடைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தீபாவளியை முன்னிட்டு கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மதுரை, நெல்லை, கன்னியாகுமரி போன்ற நீண்ட தூர விரைவு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகின்றன.
பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் குறித்து தகவல் அளிக்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிசிடிவி கேமராக்கள் நடைமேடைகளில் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களுடன் 5-க்கும் மேற்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கடும் நெரிசல் இருந்ததோடு, படிகள் வரை நின்றபடி மக்கள் பயணம் செய்தனர்.
சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் நேற்று குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்றதால் கோயம்பேடு உள் ளிட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதுதவிர, கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலும் ஏராளமானோர் புறப்பட்டுச் சென்றனர். இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து பிரதான சாலைகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை தவிர்க்க, பலரும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தியதால், மெட்ரோ ரயில்களிலும் நேற்று மாலை அதிக கூட்டம் இருந்தது. பேருந்து, ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.