தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரங்களை அறிவித்தது தமிழக அரசு !
சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து பட்டாசு வெடிப்பதற்கான 2 மணி நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து இன்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தீபாவளியன்று அன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பொது மக்கள் பட்டாசு வெடிக்கலாம்.
குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுபாட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்கலாம். உள்ளாட்சி அமைப்புக்களின் அனுமதியுடன் பொது மக்கள் ஒன்று கூடி திறந்த வெளியில் பட்டாசுகள் வெடிக்க முயற்சிக்கலாம்.
தொடர்ச்சியாக வெடிக்கும் அதிக ஒலி எழுப்பும் சர வெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்களின் அருகில் வெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
குடிசை பகுதிகள், எளிதில் தீப்பிடிக்கும் பகுதிகளுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.