தமிழகத்தில் இன்று முதல் நீட் பயிற்சி மையங்கள் இயங்கும் -கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மையங்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகின்றன என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்குரிய பயிற்சியளிக்க தனியார் நிறுவனங்கள் பெரும் தொகையை வசூலிக்கின்றன. இதனால் மிகுந்த பின்தங்கிய வகுப்பு மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவதால், இலவச நீட் பயிற்தியை அளிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதன் மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சுமார் 3200 ஆசிரியர் ஆசிரியைகள் பயிற்சி அளிக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். அடுத்த ஆண்டு, நீட் தேர்வுக்கு முன்னர் வரை இந்தப் பயிற்சி வகுப்புகள் நடக்கும். மொத்தம் 36 வாரம், விடுமுறை நாள்களில் நடைபெறும் விதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து எத்தனை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினாலும், அவர்கள் அண்டை மாநிலத்திற்கு சென்று தேர்வு எழுதும் நிலை இனி வராது என்ற உறுதிபடத் தெரிவித்தார்.