ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஆளுநரிடமும், முன்னாள் தலைமை செயலாளரிடமும் விளக்கம் கேட்டு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடிதம் !
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆளுநருக்கோ, முன்னாள் தலைமை செயலாளருக்கோ அறிக்கை அனுப்பப்பட்டதா என்று கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பிருக்கிறது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் பின்வருமாறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எத்தனை மருத்துவ குறிப்புகள் ஆளுநர் மாளிகைக்கு வந்தன ?
ஜெயலலிதா உடல்நிலை, மற்றும் அவருக்கு அளித்த சிகிச்சை குறித்த மருத்துவ அறிக்கை பெறப்பட்டிருந்தால், ஆளுநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? அதற்கு ஆளுநர் பதில் அனுப்பியிருந்தாரா?
ஜெயலலிதா உடல்நிலை, மற்றும் அவருக்கு அளித்த சிகிச்சை குறித்தும் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் ஆளுநர் மாளிகையிடையே கடிதத் தொடர்பு ஏதேனும் இருந்ததா?
ஆளுநர் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்துச் சென்றபின் அதுகுறித்து குடியரசுத்தலைவர் மாளிகைக்கு ஏதேனும் அறிக்கை அனுப்பப்பட்டதா? அல்லது தகவல் தெரிவிக்கப்பட்டதா?
இதுதவிர வேறு ஏதேனும் தகவல் இருந்தால் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்னாள் தலைமை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ள:
பாலாஜி தலைமையிலான 5 மருத்துவர்கள் கொண்ட குழு அரசுக்கு அறிக்கை அனுப்பினார்களா ? என்று அந்த கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது.
அறிக்கை வழங்கவில்லை என்றால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து அமைச்சரவைக்கு அறிக்கை அனுப்பினாரா?
ஜெயலலிதா உடல்நிலை குறித்தும் சிகிச்சை குறித்தும் அரசுக்கோ, ஆளுநருக்கோ, இந்திய அரசுக்கோ, அப்போதய முதல்வருக்கோ முன்னாள் தலைமை செயலாளர் அறிக்கை அளித்தாரா? என்றும் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்காததால், வரும் 25 ஆம் தேதி ஆஜராகுமாறு அப்போலோ தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதனுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.