
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரில் போலி இணையதளம் ஒன்றின் மூலம் வேலை வாங்கித்தருவதாக நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொது மேலாளர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இணையதளத்தின் தோற்றத்தைக் போன்ற போலி இணையதளம் www.cmrlco.org என்ற முகவரியில் உள்ளதாகக் தெரிவித்தார்.
இது குறித்து காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு நடத்திய விசாரணையில் கேரள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போலி இணையதளம் மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக விளம்பரங்கள் வெளியிட்டு அதை நம்பி விண்ணப்பித்தவர்களிடமிருந்து பணம் பெற்று வந்திருக்கிறார்.
கேரளாவில் கைதான இந்த இளைஞரின் பெயர் ஸ்ரீஜித் என்றும் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்துள்ளது. போலீசார் இவரை சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.