சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா – எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

நாகர்கோவிலில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டன. சென்னை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் இன்னும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இன்று மாலை 3 மணியளவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமையில் நடைபெறும் விழாவுக்காக நாகர்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைப்பதோடு, 67 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேரூரையாற்றுகிறார். விழாவையொட்டி 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த மூவாயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வருகிற 30-ந்தேதி சென்னையில் பிரம்மாண்டமாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.