குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்ற காவல் – சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
குட்கா முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீடு உட்பட 40 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. சிபிஐ சோதனை 2-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் தற்போது கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதில் குறிப்பாக குட்கா நிறுவனத்தின் இயக்குனர்களான மாதவராவ் மற்றும் உமாசங்கர் குப்தா ஆகியோர் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தடை செய்யப்பட்ட குட்காவை லஞ்சம் வாங்கிக் கொண்டு விற்பனை செய்ய அனுமதித்ததால் உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் பி. செந்தில் முருகன் மற்றும் மத்திய கலால் வரித்துறை கண்காணிப்பாளர் என்.கே பாண்டியனும் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே முன்னதாக அதிகாரிகளுக்கும் ஆலை உரிமையாளர்களுக்கும் இடையே தரகர்களாக செயல்பட்ட 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குட்கா முறைகேடு வழக்கில் கைதான 5 பேருக்கும் செப்-20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குட்கா ஆலை உரிமையாளர்கள் மாதவராவ், உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ் உள்ளிட்ட 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி நீலபிரசாத் உத்தரவிட்டார்.