கஜா புயல் சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு நாளை தமிழகம் வருகை
கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சரிடம் இன்று பிரதமர் கூறியிருந்தார். இதன்படி கஜா புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட மத்தியக் குழு வெள்ளிக்கிழமை தமிழகம் வருகிறது. ஆய்வு செய்த பின்னர் மத்திய அரசு நிதி ஒதுக்கும் எனத் தெரிகிறது.
கடந்த வாரம் தமிழகத்தை அச்சுறுத்திய கஜா புயல் நாகை வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. இதனால் டெல்டா மாவட்டங்கள் 30 ஆண்டுகளில் சந்தித்திராத பேரழிவைச் சந்தித்தன. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான குடிசைகள், வீடுகள் அழிந்தன. 63 பேர் உயிரிழந்தனர். அரசின் நிதி உதவியாக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அவை சென்று சேரவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
புயல் பாதித்த பகுதிகளை மூன்று நாட்களுக்குப் பின்னர் ஹெலிகாப்டரில் சென்று பார்த்த முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் வானிலையைக் காரணம் காட்டி பாதியிலேயே திரும்பினர். பின்னர் டெல்லியில் பிரதமரை இன்று காலை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஏற்பட்ட புயல் சேதங்கள் குறித்த அறிக்கையை அளித்தார்.
அப்போது அவர் தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிட்டு சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், சீரமைப்புப் பணிக்காக முதல்கட்டமாக ரூ. 1500 கோடி ரூபாய் வழங்கவும் கோரிக்கை வைத்தார். சேதப்பகுதிகளை பார்வையிட மத்தியக் குழுவை உடனடியாக அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைத்தார்.
அதன்படி சேதப் பகுதிகளைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க மத்தியக் குழு நாளை தமிழகம் வருகிறது. சென்னை வரும் இந்தக் குழு முதல் கட்டமாக முதல்வரைச் சந்தித்த பின் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைப் பார்வையிட உள்ளது.