ஓரின சேர்க்கையை தடை செய்யும் சட்டப்பிரிவு ரத்து – சுப்ரீம் கோர்ட் உத்தரவு !!!
ஓரின சேர்க்கை குற்றமல்ல என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஓரின சேர்க்கையை தடைசெய்யும் சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
அரசியலமைப்பு சட்டம் 377-வது பிரிவு ஓரினச்சேர்க்கையை குற்றச்செயலாக வரையறுத்துள்ளது. இந்த குற்றத்திற்கு சிறை தண்டனை வழங்கவும் வழி வகுத்துள்ளது. இயற்கைக்கு மாறாக சேர்க்கையில் ஈடுபட்டால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது. இது தவிர அபராதமும் உண்டு. எனவே இந்த சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இதில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டி உள்ளது என்றும் குறிப்பிட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் இன்று விசாரணக்கு வந்தது. அப்போது நீதிபதி தீபக் மிஸ்ரா, “ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட உரிமையை இந்திய அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒருவரின் தனிப்பட்ட உரிமையை மறுப்பது மரணத்திற்கு நிகராகும். மேலும் தனிப்பட்ட நபரின் அடையாளத்தை காப்பது ஜனநாயகத்தின் உரிமை என்றும் சமுதாயத்தை விட ஒரு தனி மனித சுதந்திரம் என்பது மிக முக்கியமானது” என்றும் தெரிவித்தார். மேலும் இந்த கருத்துகளை முன்வைத்து, ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே 25 நாடுகளில் ஓரினச்சேர்க்கை அங்கிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.