எம்.எல்.ஏ கருணாஸ் மேலும் இரண்டு வழக்குகளில் கைது !
திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான 2 வழக்குகளில் மீண்டும் கருணாசை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர். கொலை முயற்சி, கொலை மிரட்டல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக கைதான கருணாஸ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, காவல்துறை மனு தாக்கல் செய்திருந்தது. அதனை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் கருணாசை போலீஸ் விசாரிக்க அனுமதி தர மறுத்துவிட்டது.
இந்த வழக்கில் ஜாமின் கேட்டு கருணாஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 2 வழக்குகளில் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.