எம்.எல்.ஏ. கருணாஸ் திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி….
எம்.எல்.ஏ. கருணாஸ் திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியது உள்ளிட்ட வழக்குகளில் எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவருமான கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அண்மையில் எழும்பூர் கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையானார் கருணாஸ்.
இந்நிலையில் கருணாஸ் கடந்த ஆண்டு புலித்தேவன் பிறந்தநாளன்று மோதலில் ஈடுபட்ட வழக்கு ஒன்றில் நெல்லை போலீஸ் தேடிவந்த நிலையில் கருணாசுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பான மருத்துவச் சான்றுகளை வழங்கினர். நேற்றிரவு முதலே நெஞ்சுவலி காரணமாக கருணாஸ் அவதிபட்டு வந்ததால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கருணாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் தகவல் தெரிவித்து உள்ளார்.
நெல்லையிலுள்ள வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கோரிய மனு நிலுவையில் உள்ளதாக வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.