“எங்களிடம் உணவு இருக்கிறது மின்சாரம் தான் இல்லை” உணவு எடுத்து சென்ற கமலுக்கு மக்கள் சொன்ன பதில் !
தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ‘கஜா’ புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்து உள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிக்க சென்ற கமலிடம் எங்களிடம் உணவு இருக்கிறது மின்சாரம் தான் இல்லை என்று மக்கள் கூறியுள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன். இது தொடர்பாக ட்விட்டரில் அவர், “அம்மையப்பன்,அம்மாபேட்டை, கோட்டூர் மக்கள், கோபத்தில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்தபொழுது உணவுப்பொருட்கள் கொண்டு சென்ற எங்களிடம், எங்களுக்கு உணவு இருக்கிறது, மின்சாரம் தான் இல்லை என்று பெருந்தன்மையாக வழிவிட்டது தமிழனாக என்னை பெருமைப்படவைத்தது. இவர்களா ஏழைகள்? பெருந்தன்மைச் செல்வந்தர்கள்” என பதிவிட்டுள்ளார்.
தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால் புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு? என்று மேலும் ஒரு பதிவையும் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
நான் ஹெலிகாப்டர் மூலம் சென்று ஒவ்வொரு பகுதியிலும் என்ன மரங்கள் சாய்ந்துள்ளன? எத்தனை மரங்கள் சாய்ந்துள்ளன? என தாழ்வாக பறந்து கஜா புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.