“உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது” – ஸ்டாலின்
சபரிமலையில் அனைத்து பெண்களையும் வயது வரம்பு பார்க்காமல் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு இதுவரை 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளும் 50 வயதை தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலரும் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அதில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும். இது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பை வழங்கியது. அதில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்றும், ஆணும் பெண்ணும் சமம் என்றும் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பிற்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், “ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்’ என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. சமூக நீதி-பாலின சமத்துவம்-பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு மைல்கல்” என்று குறிப்பிட்டிருந்தார்.