உறவினர்களே உடல்களை கேட்காத நிலையில் உனக்கு என்ன அக்கறை? உயர் நீதிமன்றம் தமிழக அரசை பார்த்து கேள்வி!!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களே கேட்காத நிலையில் தமிழக அரசுக்கு என்ன அக்கறை வந்தது ? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த போது, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், உடல்களைக் கேட்பதாகவும், அது குறித்த கடிதத்தையும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அப்போது, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், உடல்களைக் கேட்டு அளித்த கடிதங்கள், மிரட்டி வாங்கப்பட்டதாக மனுதாரரின் வழக்குரைஞர் கூறியதை அடுத்து, கடிதம் குறித்து மனுதாரர் தரப்பில் விளக்கம் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே சமயம், தமிழக அரசின் முறையீட்டை ஏற்க மறுத்த நீதிமன்றம், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மே 30ம் தேதி தர உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, இதுவரை 2 பேரின் உடல்களுக்கு மட்டுமே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
மேல்முறையீடு குறித்துக் கருத்துக் கூறிய நீதிபதி, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களே கேட்காத நிலையில் தமிழக அரசுக்கு என்ன அக்கறை வந்தது? என்று கேள்வி எழுப்பியதோடு, உறவினர்களிடம் உடல்களை ஒப்படைக்க உத்தரவிடக்கோரிய தமிழக அரசின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.