இன்னும் நான்கு நாட்களில் தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம்!!!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் (TANGEDCO), இருப்பு உள்ள நிலக்கரி 4 நாட்களில் தீர்ந்துவிடும் என்பதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் தடை ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது .
மின் உற்பத்தி நிலையங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் நிலக்கரி வருவதில் கடந்த ஓராண்டாகவே பிரச்சனை நிலவி வருவதாகவும், ரயில்வே அமைச்சகமும், நிலக்கரி அமைச்சகமும் இதனை கருத்தில் கொண்டு முறையாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுவுமே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களிலும் நிலக்கரி சென்று சேர்வதில் பிரச்னை நீடிப்பதாக தெரிகிறது.
தற்போது இருப்பில் உள்ள நிலக்கரியை கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் இதுவரை மின் உற்பத்தியில் பிரச்னை ஏற்படவில்லை என TANGEDCO கூறியுள்ளது. தற்போதைய நிலக்கரி இருப்பு 4 நாட்களுக்கு மட்டுமே பயன்படும் என்பதால் நிலக்கரி வருவதில் தாமதம் ஏற்பட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின் தடை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று வழியான காற்றாலை மின் உற்பத்தியும் தென் தமிழத்தில் மழை காரணமாக வெகுவாக குறைந்துள்ளது. இதுவும் மின் உற்பத்தி குறைவுக்கு காரணமாக அமைந்துள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.