பெங்களூரில் இளம்பெண் ஒருவர் பயணம் செல்வதற்காக ஓலா கார் நிறுவனத்தில் கார் புக் செய்துள்ளார். இரவு 11.30 மணிக்கு வாகனம் வந்துள்ளது. வாகனத்தில் ஏறிய சிறிது நேரத்தில், தான் செல்ல வேண்டிய வழித்தடத்தில் பயணிக்காமல் வேறு வழியில் கார் பயணிப்பதைக் கண்டு ஓட்டுநரிடம் இதுகுறித்து அந்தப் பெண் கேட்டுள்ளார். அவரின் கேள்விக்கு பதிலளிக்காத ஓட்டுநர், காரைத் தொடர்ந்து வேகமாக ஓட்டியுள்ளார். இதையடுத்து, ஆபத்தில் சிக்கியிருப்பதை உணர்ந்த அந்தப் பெண், கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், அவரைத் சரமாரியாக தாக்கியுள்ளார். அவரிடம் இருந்த பொருள்களையும் பறித்துள்ளார். கார் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் அந்தப்பெண்ணின் கூச்சல் வெளியில் இருப்பவர்களுக்குக் கேட்கவில்லை.
தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற அந்தக் கார் சுங்கச்சாவடியை நெருங்கியுள்ளது. இதனைவிட்டால் தான் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த அந்த பெண் கார் கண்ணாடிகளை பலமாகத் தட்டியுள்ளார். அப்போது, சுங்கச்சாவடி ஊழியர்களும் இன்னும் பிற வாகன ஓட்டிகளும் இதைக் கண்டு சந்தேகப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த நபர் காரை அதிவேகமாக இயக்கியுள்ளார். சுங்கச்சாவடி ஊழியர்கள் அந்த காரை துரத்திச் சென்று, பிடித்து இளம்பெண்னை மீட்டனர். இதனையடுத்து அந்த நபர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் கார் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரியவந்ததுள்ளது.