தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் நிர்ணய கட்டணம் எவ்வளவு?
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 28-இல் தரவரிசைப் பட்டியல்: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஜூன் 11 முதல் 18-ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது. மொத்தம் 43,935 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூன் 28-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இடங்களைப் பெறும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெறும் மாணவர்கள் கல்விக் கட்டணம் உள்பட மொத்தம் ரூ.13,600-ஐ கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
அதே போன்று சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இடங்களைப் பெறும் மாணவர்கள் கல்விக் கட்டணம் உள்பட மொத்தம் ரூ.11,600-ஐ கட்டணமாகச் செலுத்த வேண்டும். சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் உள்பட மொத்தம் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரியில் எம்.பி.பி.எஸ். கல்விக் கட்டணம் ரூ.5.54 லட்சம், சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் கல்விக் கட்டணம் ரூ.3.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.3.85 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்விக் கட்டணமாக ரூ.2.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.12.50 லட்சம், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.6 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவல்லாமல் தனியார் கல்லூரிகளில் எவ்வளவு தனியாக வாங்குவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.