வாடகையை உயர்த்தக் கோரி எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்த அறிக்கையில் வாடகை ஒப்பந்தப்புள்ளி மண்டல அளவில் இல்லாமல் மாநில அளவில் தனித்தனியாக நடத்தப்படும் என்றும் அதில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மட்டுமே பங்குபெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் மாநில அளவில் ஒப்பந்தப்புள்ளி நடத்தினால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வேலை வாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகும் என்பதால், இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று காலை 5 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தில் 4,700 டேங்கர் லாரிகள் பங்கேற்றுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் சமையல் எரிவாயு தட்டுபாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.