ஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் …
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவிக் காலம் முடிந்து செல்லும்போது, இறுதி பணி நாளில் தலைமை நீதிபதியுடன் இணைந்து பணியாற்றுவது மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, அடுத்த மாதம் 22ம் தேதி ஓய்வு பெற உள்ள உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி செலமேஸ்வர், தலைமை நீதிபதி அமர்வில் இணைந்து பணியாற்றுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் நடவடிக்கைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் கடந்த ஜனவரி 12ம் தேதி மூத்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி. லோகூர் ஆகியோருடன் இணைந்து பகிரங்க பேட்டி அளித்தார். அதன் பிறகு, தீபக் மிஸ்ரா தொடர்பான எந்த வழக்கையும் விசாரிக்க அவர் மறுத்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்துக்கு இன்று முதல் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. மீண்டும் நீதிமன்றம் கூடும் முன்பாகவே நீதிபதி செலமேஸ்வர் ஓய்வு பெற்று விடுவார். எனவே, தனது கடைசி வேலை நாளான நேற்று, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் நீதிமன்ற அறை எண் 1-ல் அமர்ந்து பாரம்பரிய முறைப்படி நீதிபதி செலமேஸ்வர் வழக்குகளை விசாரித்தார். இவர்களுடன் நீதிபதி சந்திரசூட்டும் இருந்தார். வழக்கமாகவே அறை எண் 1, எப்போதும் வழக்குகள் நிறைந்தே காணப்படும். நேற்று நீதிபதி செலமேஸ்வர் முதல் அமர்வில் இடம் பெற்றதை காண ஏராளமான வக்கீல்களும், ஊழியர்களும் அங்கு குவிந்தனர்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செலமேஸ்வரர், சந்திரசூட் அடங்கிய அமர்வு 11 வழக்குகளை நேற்று விசாரித்தது. வழக்கு விசாரணை முடிந்தபின் தனது கைகளை இறுகக்கட்டிக் கொண்டு நீதிபதி செலமேஸ்வரர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறினார். பணி நிறைவு பெறும் நீதிபதியை வழியனுப்பும் விதமாக வழக்கமாக பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த விருந்தையும் அவர் நிராகரித்தார். சொந்த காரணங்களால் விருந்தை நிராகரிப்பதாகவும், இதற்கு முன் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் இருந்து விடை பெற்ற போதும் இதுபோன்ற விருந்தில் பங்கேற்றதில்லை எனவும் தெரிவித்தபடி பிரியாவிடை பெற்றார்.
மூத்த வக்கீல்கள் நெகிழ்ச்சி
நீதிபதி செலமேஸ்வரர் பணி ஓய்வை முன்னிட்டு நடந்த பிரியாவிடை நிகழ்வில் மூத்த வக்கீல்கள் ராஜீவ் தத்தா, பிரசாந்த் பூஷண், கோபால் சங்கர நாராயணன் ஆகியோர் நீதிபதி செலமேஸ்வர் குறித்து பேசினர். பிரசாந்த் பூஷண் பேசுகையில், ‘ஜனநாயகத்தை பாதுகாத்ததற்கு நன்றி. உங்கள் முன்னிலையில் நிற்பதையே நான் பெருமையாக கருதுகிறேன். நமது நாடு மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாப்பில் உங்களுடைய பங்கினை இனி வரும் தலைமுறையினர் நிச்சயம் நினைவுகூர்வர்’’ என்று பேசினார். வக்கீல் ராஜீவ் தத்தா பேசுகையில், ‘‘உச்ச நீதிமன்றத்தின் மாண்பினை பாதுகாத்ததற்கு நன்றி’’ என்றார். கோபால் சங்கரநாராயணன் பேசுகையில், ‘‘இளம் வக்கீல்கள் மீது நீங்கள் கொண்ட அக்கறைக்கு நன்றி. உங்கள் பணி என்றென்றும் நினைவு கூறப்படும்’’ என்றார்.