நியூயார்க்
அமெரிக்காவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனமான இண்டெல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பிரயின் கர்சனிச் நேற்று ராஜினாமா செய்துள்ளார்
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற கம்ப்யூட்டர் நிறுவனமான இண்டெல் நிறுவனத்தில் கடந்த 2013 ஆம் வருடம் மே மாதத்தில் இருந்து பிரெயின் கர்சனிவ் தலைமை அதிகாரியாக உள்ளார் . இவர் தலைமை அதிகாரி ஆன பிறகு இந்த நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. கம்ப்யூட்டர் மட்டுமே வடிவமைத்துக் கொண்டிருந்த இண்டெல் நிறுவனத்தை தகவல் தொழில்நுட்பத் துறையிலும் இவர் நுழையச் செய்துள்ளார்.
இதனால் தொழில் நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள இண்டெல் நிறுவனப் பங்குகளின் விலை இருமடங்கு உயர்ந்தது. இண்டெல் நிறுவனத்தின் சிப்புகள் மூலம் தகவல்கள் திருட வாய்ப்புள்ளதாக எழுந்த செய்தியினால் சற்றே குறைந்த பங்குகளின் விலையை மீண்டும் தனது செயல்பாட்டின் மூலம் உயர்த்திய பெருமையும் பிரெயினுக்கு உண்டு.
பிரெயின் தனது அலுவலக பணியாளர் ஒருவருடன் உறவு வைத்திருந்ததாக புகார் எழுந்தது. தற்போது #மீடூ என்னும் வடிவில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து எழுதி வரும் வரிசையில் இவரைப் பற்றி ஒரு ஊழியர் குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது. இண்டெல் நிறுவன விதிகளின்படி அங்கு பணிபுரிபவர்களுக்கு தனிப்பட்ட முறையில் உறவு வைத்திருக்க கூடாது.
இண்டெல் நிறுவனம் இது குறித்து உள்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் இருக்கும் போது பதவியில் இருக்கக் கூடாது என்பதால் பிரெயின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக நிதித்துறை அதிகாரி ராபர்ட் ஸ்வான் தலைமை அதிகாரி பொறுப்பை ஏற்றுள்ளார்.