BS IV வகை வாகனங்கள் விற்பனைக்கு தடை – உச்சநீதி மன்றம்
2020 -ஆம் ஆண்டு ஏப்ரல் 1 க்கு பிறகு பிஎஸ் 4 ( Bharat stage emission standards ) வகை வாகனங்களை விற்பனை செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. 2020 ஏப்ரல் 1 க்கு பிறகு பிஎஸ் 4 வகை வாகனங்களை பதிவு செய்யவும் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக BS IV வகை வாகனங்கள் 2020 ஏப்ரல் 1க்கு பிறகு விற்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2020ஏப்ரல் முதல்நாளில் இருந்து பி.எஸ் 6 என்கிற மாசு கட்டுப்பாட்டுத் தரத்துக்கு வாகனங்கள் இருக்க வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
ஆனால் வாகன உற்பத்தியாளர்கள் 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை பி.எஸ் 4 ரக வாகனங்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளனர். மேலும் 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பி.எஸ் 4 வாகனங்களை விற்க அனுமதிக்கலாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தால் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.எஸ் 4 மாசு கட்டுப்பாட்டுத் தரமுள்ள வாகனங்களை 2020 ஏப்ரல் முதல் நாளுக்குப் பின் விற்கவும் பதிவு செய்யவும் கூடாது என உத்தரவிட்டனர்.