8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு – காலா படத்தில் ஹீரோ நிஜத்தில் வில்லனா – சீமான் ஆவேசம்!
![](https://www.arasuseithi.com/wp-content/uploads/2018/07/seeman-specks-about-rajini-8-way.jpg)
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் 8 வழிச்சாலை போன்ற பெரும் திட்டதை தான் மிகவும் வரவேற்பதாக கூறினார். இதனால் தமிழ்நாட்டில் தொழில் வளம், வேலைவாய்ப்புகள் பெருகும். நாடு வளர்ச்சி அடையும். பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது, இழப்புகள் வரத்தான் செய்யும்.
அதை மக்கள் ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இந்த கருத்து 8 வழிச்சாலைக்கு எதிராக போராடி வருபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசின் கருத்துக்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. விவசாயிகளை வலிக்காமல் கத்தியால் குத்துங்கள் என்று கூறுவது போலத் தெரிகிறது.
மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினிக்கு ஒரு கேள்வியும் தொடுத்தார். அதில் உங்கள் ராகவேந்திரா மண்டபத்தின் நடுவே இந்தச் சாலை வந்தால் என்ன செய்வீர்கள்? நாடு தான் முக்கியம் என்று விட்டு விடுவீர்களா? காலா படத்தில் ’நிலம் உங்களுக்கு அதிகாரம்; எங்களுக்கு அது வாழ்க்கை’ என்று வசனம் பேசி விட்டு, இன்று அரசுக்கு துணை போவது துரோகம் இல்லையா?
தூத்துக்குடிக்கு சென்று போராடியவர்களை சமூக விரோதிகள் என்று ரஜினி கூறினார். நல்ல வேளை 8 வழிச்சாலைக்கு எதிராக போராடியவர்களை சமூக விரோதிகள் என கூறாமல் விட்டுவிட்டார் என்று சீமான் கூறினார்.