பணமதிப்பிழப்பு உத்தரவுக்குப் பின் கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.240 கோடி கருப்புப் பணம் மாற்றப்பட்டது வருமான வரித்துறை சோதனை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு கடந்த 28 ஆண்டுகளாக கிறிஸ்டி என்ற தனியார் நிறுவனம் முட்டை மற்றும் பிற பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. பொது விநியோகத்துறையின் கீழ் இந்த பொருட்களை வாங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக வருமான வரித்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தொடர்ந்து ஐந்து நாட்களாக சென்னை ,நாமக்கல்,பெங்களூர் என பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதில் மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்பு,பணமதிப்பிழப்பின் போது கருப்புப் பணத்தை மாற்றியது போன்றவை தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன. பொது விநியோகத்துறை இயக்குனர் சுதா தேவிக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இது பற்றி கிறிஸ்டி நிறுவனத்தின் தலைவர் குமாரசாமியிடமும் நாமக்கல்லில் வைத்து தனியே விசாரணை நடைபெற்று வருகிறது.