18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் 3வது நீதிபதி தீர்ப்பு !

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 3-வது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பு வழங்கினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 18 எம்எல்ஏ-க்கள் ஆளுநரிடம் மனு அளித்ததை தொடர்ந்து அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 எம்எல்ஏ-க்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு விசாரித்து ஜூன் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 3-வது நீதிபதியாக நீதிபதி சத்யநாராயணன் நியமிக்கப்பட்டார்.
மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணன் வழக்கை விசாரித்து வந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது 3-வது நீதிபதியான சத்யநாராயணன் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று அதிரடியான தீர்ப்பை வழங்கினார்.
மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணன் வழங்கிய தீர்ப்பில் கூறிருப்பதாவது:
ஏற்கனவே பிறபிக்கப்பட்ட மாறுபட்ட தீர்ப்புகள் அடிப்படையில் இந்த தீர்ப்பை வழங்கவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட பார்வை.
முதல்வருக்கு எதிராக 18 எம்.எல்.ஏ-கள் ஆளுநரிடம் மனு அளித்தபோது, இதில் தன்னால் தலையிட முடியாது என ஆளுநர் கூறியுள்ளார். இந்த தகவலை விசாரணையின் போது தெரிவிக்கவில்லை.
சபாநாயகர் முடிவில் தவறு இல்லை; தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை.
18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது ஐகோர்ட்.
அரசு கொறாடா பிறப்பித்த உத்தரவின் அடிப்படையை ஆராய்ந்து பார்த்தே உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாட்சியத்தையும் ஆராய்ந்து பார்த்துதான் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையையும் அகற்ற உத்தரவிட்டார். இவ்வாறு தீர்ப்பை வாசிக்கும்போது நீதிபதி சத்தியநாராயணன் கூறினார்.