ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல – அர்ஜுன் ராம் மேஹ்வால்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது இல்லை என மத்திய நீர்வள இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிப்காட் வளாகத்தில் நிலத்தடி நீரின் நிலை என்ன? என்றும், நிலத்தடி நீர் மாசுபட்டு உள்ளதா என்றும்? மாநிலங்களவையில் சசிகலாபுஷ்பா எம் .பி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்தார்.
அதில் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில், அங்கு நிலத்தடி நீரில் மத்திய தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அங்கீகாரத்தை விட அதிக அளவிலான தனிமங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதில் காட்மியம், குரோமியம், மக்னீசியம், இரும்பு ஆகிய தனிமங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட நீரில் அதிகமாக உள்ளது என்றும் அர்ஜுன் ராம் மேஹ்வால் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு தனிமங்கள் கலந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருந்தாலும் நிலத்தடி நீரில் உள்ள மாசுக்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் அர்ஜூன் ராம்பால் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.