விஷால் நேரில் ஆஜராகவில்லை என்றால் ‘ரிமாண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும்’– நீதிபதி எச்சரிக்கை

நடிகர் விஷால் 1 கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தவில்லை. இதனால் அவரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சேவை வரித்துறை சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு 2 முறையும், 2017-ம் ஆண்டு 2 முறையும், 2018-ம் ஆண்டு ஒரு முறையும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், இதுவரை ஒரு முறை கூட நடிகர் விஷால் நேரில் ஆஜராகவில்லை. இதனால், சேவை வரித்துறையினர் விஷால் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலர்மதி, சேவை வரி விவரங்கள் ஏன் அளிக்கப்படவில்லை? சம்மனுக்கு ஏன் விஷால் நேரில் ஆஜராகவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி கேட்டார். அதற்கு விஷால் தரப்பிடமிருந்து சரியான முறையில் பதில் அளிக்கப்படவில்லை.
பின்னர், வழக்கு விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்த நீதிபதி மலர்மதி, ‘விஷால் அன்றைய தினம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அவர் அன்று ஆஜராகவில்லை என்றால் ரிமாண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என எச்சரித்தார்.