ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை – ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அறிவிப்பு !
இந்தியா முழுவதும் இன்னும் 4 மாதங்களில், ஆறாயிரம் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இது தொடர்பாக அமைச்சர் பியுஷ் கோயல் பேசியதாவது:
கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் நாட்டிலுள்ள 711 ரயில் நிலையங்களில் ஏற்கனவே இலவச வைஃபை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 6,000 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவையை வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் அடுத்த 4 மாதங்களில் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்திய நாட்டில் சுமார் 8,000 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில் 4-ல் 3 பங்கு ரயில் நிலையங்களில் (அதாவது சுமார் 6,000 ரயில் நிலையங்கள்) இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் இலவச இணைய சேவையை பெற முடியும். ரயில் பயணிகள் மட்டுமல்லாது, ரயில் நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் இலவச வைஃபை வசதி மூலம் தங்களுக்கு தேவையான தகவல்களை இணையதளத்தின் மூலம் பெறலாம் என்றார் பியுஷ் கோயல்.