மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சூடுவைத்து கொடுமை – இருவர் கைது!
மனவளர்ச்சி குன்றிய சிறுமி சூடுவைத்து கொடுமை செய்யப்பட்டதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காப்பகத்தின் பெண்ஊழியர்கள் இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆலங்கோடு பகுதியில் சிஎஸ்ஐ மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும்இந்த பள்ளியானது, அரசு உதவி பெறும்பள்ளி ஆகும்.
இங்கு பயின்று வரும் 40 பேரில், 6 சிறுமிகள் உள்பட 26 பேர்அங்குள்ள காப்பகத்தில் பராமரிக்கப் பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை (21/07/2018) அந்த காப்பகத்திலுள்ள 17 வயது சிறுமியை கொடுமைப்படுத்துவதாக, மாவட்டகுழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்டகுழந்தைகள் நல அலுவலர் குமுதா மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் காப்பகத்தில் நுழைந்து ஆய்வு செய்தனர்.
அப்போது காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகளில் 17 வயதானமன வளர்ச்சி குன்றிய சிறுமி ஒருவரின் உடலில் வயிறு, முதுகு, கை, கால்களில் தீக்காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுமியை மீட்டஅதிகாரிகள் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இது குறித்து காப்பக ஊழியர்களிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், குளச்சல் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து, சிஎஸ்ஐ மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியின் காப்பக சமையலர் சரோஜா (50), ஜெபபிரியா (45) ஆகிய இருவரை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை அனைத்திந்திய இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் உஷாபாசி, குருந்தங்கோடு வட்டாரசெயலாளர் அன்புசெல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் ஆசாரிப்பள்ளம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
சூடுவைப்பு கொடுமைக்கு கண்டனம் தெரிவித்த மாதர் சங்க மாநிலதுணை செயலாளர் என்.உஷா பாசி கூறுகையில், ஆலங்கோடு பகுதியில் உள்ள அந்த காப்பகத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
அந்த மாணவியை வேறு ஏதோ உள்நோக்கத்துடன்தான் உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை தீவிர விசாரணை நடத்தவேண்டும்.
மேலும் குழந்தைகள் நல அதிகாரி இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் உள்ள காப்பகங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் அளிக்கவேண்டும் என கூறினார்.