பிராங்கோ மீதான பாலியல் புகாரின் முக்கிய சாட்சியான பாதிரியார் திடீர் மரணம்
முன்னாள் பேராயர் பிராங்கோ மீது கன்னியாஸ்திரி ஒருவர் தன்னைப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். இதனையடுத்து பிராங்கோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கேரளக் காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பிராங்கோ தற்போது நிபந்தனை ஜாமினில் வெளிவந்து பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ளார்.
பிராங்கோ மீது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுத் தெரிவிப்பதற்கு உதவியதாக இருந்தவர் பாதிரியார் குரியாக்கோஸ் எனக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்த அவர், பிராங்கோவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் பலர் தன்னிடம் புகார் கூறியதாகத் தெரிவித்திருந்தார். இதனால் தனக்கு பல முறை கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் குரியகோஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜலந்தர் மாவட்டத்தில் போக்பூரில் உள்ள தேவாலயத்தில் தனது அறையில் பாதிரியார் குரியாக்கோஸ் இறந்து கிடந்தார்.
பிராங்கோவுக்கு எதிரான சாட்சியம் என்பதால் குரியாக்கோஸ் கொல்லப்பட்டிருக்கலாம் என அவரின் சகோதரர் ஜோஸ் தெரிவித்துள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகத் தன்னிடம் தனது சகோதரர் தெரிவித்ததாகவும் ஜோஸ் குறிப்பிட்டுள்ளார்.