புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக நாளை முதல் தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்,
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெறும் என தெரிவித்துள்ளார்.
இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றாலும், இதன் காரணமாக நாளை கடலோர மாவட்டங்களில் மழை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
வடகடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் தென்கடலோர மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என கூறினார்.
20ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் பரவலாக மழை பெய்யும் என கூறிய அவர், தென்கிழக்கு, தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று லேசான மழை பெய்யும் என்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.