தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையில் ஞாயிற்றுக் கிழமை காலை வல்லுநர் குழு ஆய்வு..!
தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகா்வால் தலைமையிலான 3 போ் கொண்ட குழு நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை ஸ்டொ்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. மேலும் பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளது.
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம், தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு இன்று மாலை தூத்துக்குடி வருவதாக அவர் கூறினார். மேலும் இன்று மாலை தூத்துக்குடி வரும் ஆய்வு குழு முதல் கட்டமாக உப்பாற்று ஓடை பகுதியில் கொட்டப்பட்டுள்ள காப்பர் கழிவுகளை பார்வையிட உள்ளது.
நாளை காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் குழு, பின்னர் தூத்துக்குடி நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 11.30 மணிக்கு பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்க உள்ளதாகவும் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
கருத்துக்கேட்புக் கூட்டம் பற்றி தூத்துக்குடி ஸ்டெர்லைட் பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் தெரிவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.