திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் 2 கிலோ தங்கம் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வரும் மூன்றாவது நாள் விசாரணையில் 2 கிலோ தங்கம் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த மூன்று நாட்களாக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் மதுரையிலிருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தை பொருத்தவரை இங்கு தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் அதிக அளவில் கடத்தி வருவதாக எழுந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.
இந்த விமான நிலையத்தில் சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்த கடத்தலுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் துணையாக இருந்தது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் தான் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.