டெங்குவின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழி முறைகள்

டெங்கு காய்ச்சல் டெங்கு எனும் வைரஸ் கிருமியால் உருவாகிறது. டெங்கு’ என்ற ஸ்பானிய மொழிச் சொல்லுக்கு, `எலும்பு முறிவுக் காய்ச்சல்’ என்று பொருள்.
அதாவது இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான வலி தோன்றும். அதனால்தான் இப்படி அழைக்கப்படுகிறது.
இந்த வைரஸ் கிருமிகளில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன. ஒரு வகை வைரஸால் டெங்கு உண்டாகி குணமான பின்னர், வாழ்நாளில் திரும்பவும் அதே வைரஸால் பாதிப்பு இருக்காது. அதற்கான எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாகி இருக்கும். அதே நேரத்தில், மற்ற வகை வைரஸ் வகையால் டெங்கு ஏற்படலாம்.
அறிகுறிகள்:
திடீரென கடுமையான காய்ச்சல் (104 டிகிரி ஃபாரன்ஹீட்/ 40 டிகிரி செல்சியஸ்), அதிகமான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, கண் விழி சிவந்து, வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசுதல், உடலில் சிவப்புப் புள்ளிகளும் தோன்றும்.
இதோடு, எலும்புகளை முறித்துப்போட்டதைப்போல கடுமையான வலி எல்லா மூட்டுகளிலும் ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.
டெங்குவை தடுக்கும் வழிகள்:
டெங்குவிலிருந்து தற்காத்துகொள்ள தடுப்பூசி எதுவும் இல்லை. கொசுக்களை ஒழிப்பது ஒன்றே வழி. கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்.
குறிப்பாக, வீட்டைச் சுற்றி தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள். குடிப்பதற்காக குடம், தண்ணீர் தொட்டிகளில் சேமித்துவைக்கும் நீரை நன்றாக கொசு புகாதபடி மூடிவைத்துப் பயன்படுத்த வேண்டும்.
கொசு எதிர்ப்புக் களிம்பை உடலில் பூசிக்கொள்ளலாம். கொசு விரட்டி, கொசுவலையைப் பயன்படுத்தி கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம்.
மனிதனின் உடலில் இருந்து வெளிப்படும் வியர்வை வாசம், சுவாசித்தலின்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, உடலின் வெப்பம் ஆகியவை கொசுக்களை ஈர்க்கும். எனவே, கை, கால் முழுக்க மறைக்கும் வகையில் ஆடைகளை அணியலாம்.
சிகிச்சை முறைகள்:
டெங்குக் காய்ச்சலுக்கு எனத் தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டாமால் ( Paracetomol) மாத்திரையும், உடன் உடல்வலியைப் போக்க உதவும் மருந்துகளும் தரப்படும்.
சிலருக்கு மட்டுமே அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.
இயற்கை சிகிச்சை முறைகள்:
சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மருத்துகளில் நிலவேம்பு கஷாயம், ஆடாதோடா இலை குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்குவின் பாதிப்பில் இருந்து காக்கும். இவற்றை நாட்டு மருந்துக் கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனைப் பிரிவில் வாங்கிப் பயன்படுத்தலாம். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்து, டெங்கு வைரஸை அழிக்கும்.