சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருமுருகன் காந்தி மருத்துவமனையில் அனுமதி
திருமுருகன் காந்தி உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்தும், சென்னை-சேலம், பசுமை வழிச்சாலை திட்டம் குறித்தும் பேசினார்.
திருமுருகன் காந்தியின் இந்த பேச்சு முகநூலில் வீடியோ மூலமாக வெளியாகியது. சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் இந்த விடியோவை அடிப்படை ஆதாரமாக கொண்டு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் மே-17 இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் அவர் பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அதனை அறிந்த போலீசார், பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் அவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு 45 நாட்களாகியுள்ள நிலையில், இரத்த அழுத்தம் குறைவு காரணமாக நேற்று சிறையில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து இன்று காலை போலீசார் அவரை வேலூர் அருகே உள்ள அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாக கூறியுள்ளனர்.
தனது ஆரோக்கியமின்மை தொடர்பாக திருமுருகன் காந்தி, தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும்படி ஏற்கனவே கோரியுள்ளார். அதற்கு மயிலாடுதுறை, ஆலந்தூர், எழும்பூர் போன்ற நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நீதிபதிகள் அனுமதி அளித்தும் போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.